search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெரம்பலூரில் ஆசிரியர் கொலை"

    பெரம்பலூர் அருகே திருமணம் செய்ய மறுத்த ஆசிரியையை காதலன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் நால்ரோடு பகுதியை சேர்ந்தவர் ஷேட்டு, ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். இவரது மகள் கமருன்நிஷா (வயது 27). இவர் குன்னம் அருகே இலந்தங்குழி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். தினமும் காலை பெரம்பலூரில் இருந்து அல்லிநகரம் வரை பஸ்சில் செல்லும் அவர், அங்கிருந்து பள்ளிக்கு மொபட்டில் செல்வார்.

    அது போல் இன்று காலை அவர் அல்லிநகரத்திற்கு பஸ்சில் சென்று இறங்கியதும் அங்கிருந்து மொபட்டில் பள்ளிக்கு புறப்பட்டார். அல்லிநகரம்-இலந்தக்குழி இடையே உள்ள ஓடை பாலம் பகுதியில் செல்லும் போது அங்கு மர்ம நபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    அவர்கள் கமருன் நிஷாவை வழிமறித்ததோடு அவருடன் தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றவே ஆத்திரமடைந்த 2 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் கமருன் நிஷாவை சரமாரி குத்தினர். கழுத்தையும் அறுத்தனர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.

    பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அதனை நேரில் பார்த்த பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். இதனிடையே கத்தியால் குத்தி விட்டு தப்ப முயன்ற மர்ம நபர்களை பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சிலர் மடக்கி பிடித்தனர். இதில் ஒருவன் பொதுமக்கள் பிடியில் இருந்து தப்பியோடி விட்டான்.

    இதையடுத்து காயமடைந்து உயிருக்கு போராடிய கமருன் நிஷாவை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பிடிபட்ட வாலிபரிடம் விசாரணை நடத்திய போது, அவர் பெரம்பலூர் பாரதிதாசன் நகரை சேர்ந்த செல்லமுத்து மகன் ஆனந்த் என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

    நானும் கமருன்நிஷாவும் கடந்த 2006-ம் ஆண்டு முதல் காதலித்து வந்தோம். அவருக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்தேன். ஆனால் இடையில் திடீரென என்னுடன் பேசுவதை நிறுத்தி விட்டார். என்னை திருமணம் செய்யவும் மறுத்து விட்டார். மேலும் அவருக்கு வேறொரு மாப்பிள்ளையை பார்த்து நிச்சயம் செய்தனர். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து கமருன்நிஷாவை கொலை செய்ய எனது நண்பன் அப்பார்க்குடன் சேர்ந்து திட்டமிட்டேன்.

    அதன்படி இன்று காலை கமருன்நிஷா பள்ளிக்கு செல்லும் போது அவரை நண்பருடன் சேர்ந்து கொலை செய்தேன் என்றார். கைதான ஆனந்த் தச்சு வேலை செய்து வருகிறார். தப்பியோடிய அவரது நண்பர் அப்பார்க்கை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    திருமணம் செய்ய மறுத்த ஆசிரியையை காதலன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×